உலகம்

உக்ரைனில் 11 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

கிழக்கு உக்ரைன் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் அரசு எதிர்ப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 11 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கிழக்குப் பகுதியின் பல்வேறு இடங்களை ரஷ்ய ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். அங்கு பிளாகோட்னி பகுதியில் ராணுவ சோதனைச் சாவடி உள்ளது. அந்தச் சோதனை சாவடியை புதன்கிழமை திடீரென முற்றுகையிட்ட அரசு எதிர்ப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 3 ராணுவ கவச வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பின்னர் சோதனைச் சாவடியில் இருந்த ஆயுதங்களைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

உக்ரைனில் மே 25-ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்ப்புப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

உக்ரைன் அதிபர் தேர்தலை ரஷ்யா சீர்குலைக்க முயன்றால் அந்த நாடு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT