பப்புவா நியூகினியா மற்றும் சாலமன் தீவுகளில் மீண்டும் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலை ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 7.2 என்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், பப்புவா நியூகினியாவின் பங்குனாவிற்கு தென்மேற்கே 149 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இதன் மையத்திலிருந்து 300 கிமீ தொலவில் உள்ள கடற்கரை ஊர்களில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளது என்று யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்தது.
ஆனால், சுனாமி அலைகளை இந்த நிலநடுக்கம் உருவாக்கமலும் போகலாம் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனாலும் எச்சரிக்கையாக கடற்கரைப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி 4000 கிமீ நீள பசிபிக் ஆஸ்திரேலியா டெக்டானிக் பிளேட்டில் அமைந்துள்ளது. இது கண்டத்தட்டுக்கள் மோதிக்கொள்ளும் பசிபிக் ரிங் ஆஃப் பயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும்.
ஒரே வாரத்தில் 4-வது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.