உலகம்

ஹவுத்திகளுக்கு தடை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

ராய்ட்டர்ஸ், ஏபி

ஏமன் விவகாரம் தொடர்பாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தடை விதித்து சவுதி அரேபியா கொண்டு வந்த தீர்மானம், ஐ.நா-வில் நிறைவேறியது. இதற்கு, ஹவுத்தி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏமன் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு தடை விதிக்கவும், அவர்களுக்கு ஆயுதங்களை விற்க தடை பிறப்பித்தும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை ஐ.நா. நிறைவேற்ற 14 நாடுகள் ஆதரவு அளித்தன. தீர்மான வாக்கெடுப்பில் ரஷ்யா மட்டும் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது.

முன்னதாக ஏமனில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அதிபர் மகன், ஹவுத்தி தலைவர் மகனுக்கு தடை

அத்துடன், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுத்தியின் மகன் மற்றும் முன்னாள் ஏமன் அதிபர் அலி அப்துல்லாவின் மகன் ஆகியோர்களின் சொத்துக்கள் அனைத்தையும் சர்வதேச அளவில் முடக்கவும், அவர்கள் பயணிக்கவும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பேரணி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சவுதி கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஹவுத்திக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த தீர்மானம் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை எதிர்த்து ஏமன் மக்களை திரட்டி மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக அந்த கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் செய்திகள் வெளியிடப்பட்டன.

SCROLL FOR NEXT