உலகம்

கொலை வழக்கு: சவுதியில் இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஏஎஃப்பி

சவுதியில் முதலாளியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதியில் கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சஜாதா அன்சாரி என்பவர் சவுதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் பணியில் இருந்தார். அவரது முதலாளியை அவரது வீட்டில் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்துச் சென்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அன்சாரியின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தவிர, சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாதர் அல்-ரோவீலி என்பவருக்கும் அவரது முன்னாள் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதியில் இந்த வருடத்தில் மட்டும் 65 பேருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு சவுதியில் இதுபோன்று 87 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 60 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல், கொலை, சமய எதிர்ப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கொள்ளை ஆகியவை மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாக கருதப்படுகிறது.

சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையின்படி, 2014-ல் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதல் 5 இடங்களை பிடித்து உள்ளது.

SCROLL FOR NEXT