கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தூதராக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வெளியிட்டுள்ளார்.
கண்ணி வெடிகள் மற்றும் பிற வெடிப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கான தூதராக டேனியல் கிரெய்க் செயல்படுவார்.
இதுதொடர்பாக பான் கி மூன் கூறியதாவது:
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கிரெய்க்குக்கு கொல்வதற்கான உரிமம் வழங்கப்பட்டிருக்கும். தற்போது நாங்கள் பாதுகாப்ப தற்கான உரிமத்தை வழங்கு கிறோம். இவர் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் கண்ணி வெடிகளை அகற்றும் ஐ.நா.வின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என நம்புகிறோம்.
உலகிலுள்ள மற்ற திரைப்பட ரசிகர்களைப்போலவே, ஒரு ஜேம்ஸ்பாண்டாக வெடிகுண்டு களைச் செயலிழக்கச் செய்யும் கிரெய்க்கின் காட்சிகளை நானும் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். தற்போது, தனது திரைநட்சத்திரப் புகழைப் பயன்படுத்தி கண்ணி வெடி பயன் பாடுகளுக்கு எதிரான செயல்பாடு களை மேற்கொள்ள அவர் ஒப்புக்கொண்டிருப்பது எனது உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
கண்ணி வெடி அச்சுறுத்தல் இல்லா உலகம் என்ற நோக்கத்தில் அவரின் ஈடுபாட்டுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நியமனம் தனக்கு பெருமையளிப்பதாகக் கூறியுள்ள டேனியல் கிரெய்க், “இராக், சோமாலியா, மாலி ஆகிய நாடு களில் பயன்படுத்தப்படும் மேம் படுத்தப்பட்ட வெடிப்பொருள்கள் (எல்இடி), சிரியாவில் பயன் படுத்தப்படும் பேரல் வெடி குண்டுகள், கம்போடியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படும் கண்ணி வெடிகள் ஆகியவை குறித்து ஒரே சமயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்றார்.
ஐ.நா. தூதராக டேனியல் கிரெய்க் 3 ஆண்டுகளுக்குச் செயல்படுவார். ஐ.நா.வின் கண்ணி வெடி நடவடிக்கை சேவைகள் பிரிவின் (யுஎன்எம்ஏஎஸ்) விழிப்புணர்வு பிரச்சாரப் படங்களில் அவர் நடித்துள் ளார்.