உலகம்

தங்கம், தந்தம் கடத்தலால் தீவிரமடையும் காங்கோ உள்நாட்டுப் போர்: ஐ.நா. சபை அறிக்கையில் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

காங்கோவில் தங்கம், வைரம், தந்தம் கடத்தலால் அந்த நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது என்று ஐ.நா. சபை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுமார் 49-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தங்கம், வைரம், செம்பு, இரும்பு, வனவளம் என எல்லா இயற்கை வளங்களையும் காங்கோ கொண்டுள்ளது. அங்கு சட்ட விரோதமாக தங்கம், வைரங்கள் வெட்டியெடுக்கப்பட்டு கடத்தப் படுகின்றன. மேலும் யானைகள் கொல்லப்பட்டு அவற்றின் தந்தங்களும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

காங்கோவின் கிழக்குப் பகுதி யில் கடத்தல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. அங்கு ஆண்டுக்கு ரூ.7800 கோடி அளவுக்கு கடத்தல் பணம் புரள்கிறது.

அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் கிளர்ச்சிப் படைகளுக்குள்ளேயே சண்டைகள் நடைபெறுகின்றன. குழப்பங்கள் நிறைந்த அந்த நாட்டில் அமைதிப் பணியை மேற்கொள்ள 20 ஆயிரம் ஐ.நா. வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வளங்கள் இருந்தும் உலகின் வறுமையான நாடுகள் பட்டியலில் காங்கோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT