உலகம்

ஏமன் ஐ.நா. தூதர் ராஜினாமா: ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வு

ராய்ட்டர்ஸ்

ஏமன் நாட்டுக்கான ஐ.நா. தூதர் ஜமால் பெனோமர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனை அவர் தனது ஃபேஸ்புக் நிலைப் பதிவில் தெரிவித்தார்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவரான பெனோமர் ஏமன் தூதராக கடந்த 2012- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஏமன் மீது சவுதி அரேபிய போர் தொடுத்து வரும் நிலையில் இதனை தடுக்கும் முயற்சியில் ஐ.நா. ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாக பதவி விலகுவதை பெனோமர் அறிவித்துள்ளார். வேறு சில பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக அவர் தனது நிலைத் தகவலில் குறிப்பிட்டார்.

பெனோமர் ராஜினாமாவை தொடர்ந்து மொரீஷியஸைச் சேர்ந்த இஸ்மாயில் அவுல்ட் ஷ்க் அகமதை அடுத்த தூதராக ஐ.நா. நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் எபோலா நோய் தொற்று அபாயகரமாக இருந்த போது அதனை குணப்படுத்தும் முயற்சியை கானா நாட்டில் மேற்கொண்டார்.

ஏமனில் தொடரும் போரால் அங்கிருந்து அனைத்து நாட்டைச் சேர்ந்த மக்களும் வெளியேறி வருகின்றனர். இதனால் ஏற்கெனவே இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன.

SCROLL FOR NEXT