2 அல்லது 5 ஆண்டுகளில் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை முன்னமேயே கணித்து விடும் புதிய ரத்தப் பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளது.
இது மார்பகப் புற்று நோய் சிகிச்சை மற்றும் கணிப்பில் ‘சட்டக மாற்றத்தை’ ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மார்பகப் புற்று தோன்றியிருந்தால் மட்டுமே மேமோகிராபி செய்து கண்டுபிடிக்க முடியும். நோய் வருவதற்கு முன்னால் இந்த சோதனையால் கண்டு பிடிக்க முடியாது.
டென்மார்க்கில் உள்ள பல்கலைக் கழக பேராசிரியர் ராஸ்மஸ் புரோ என்பவர் தற்போது புதிய ரத்தப் பரிசோதனை முறை மூலம் மார்பகப் புற்று நோயை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்து விடலாம் என்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 57.000 பெண்களை வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதாவது ரத்த பரிசோதனையில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான காரண/காரிய விவரங்களைச் சேகரிக்க முடிந்து வந்துள்ளது. ஆனால், ரத்தத்தில் கலந்துள்ள அனைத்து மூலக்கூறுகளையும் பரிசோதனை செய்யும் இந்த முறை மூலம் மார்பகப் புற்று நோயை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்து விட முடியும் என்கிறார் ராஸ்மஸ் புரோ.
இந்த ரத்தப் பரிசோதனை முறை மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களை உருவாக்கும் 'உயிரியல் அடையாளங்கள்' தெரியவரும். அதாவது இந்த பலதரப்பட்ட உயிரியல் அடையாளங்களுக்கு இடையே நிகழும் ஊடாட்டங்களைக் கொண்டு மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை கணித்து விட முடியும்.
இது பற்றிய விரிவான கட்டுரை 'மெட்டபோலோமிக்ஸ்' (ஒரு குறிப்பிட்ட செல் இயக்கங்கள் விட்டுச் செல்லும் தனிச்சிறப்பான ரசாயன அடையாளங்கள் பற்றிய ஆய்வு) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.