பாகிஸ்தான் நாட்டின் பிரபல மாடல் ஐயான் அலி நிதி மோசடி குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு கடந்த இரு வாரங்களாக சிறையில் இருந்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 14-ம் தேதி இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல ஐயான் அலி திட்டமிட்டிருந்தார். அவர் தன்னோடு 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3 கோடி) ரொக்கத்தை எடுத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 லட்சம்) வரை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.
எனவே அன்று அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் ஐயான் அலி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வழக்கறிஞர் கூறும்போது, ஐயான் அலி இதுபோன்ற சுங்க விதிமுறைகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்றார். அவரது ஜாமீன் மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அந்தச் சிறையில் உள்ள இதர 4,500 கைதிகளைப் போலவே ஐயான் அலி நடத்தப்படுகிறாரா என்பது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் விசாரித்து வந்தன.
அவ்வாறு வெளியான செய்திகளில் ஒன்று, சிறைக்குள் ஐயான் அலிக்கு ராஜமரியாதை தரப்படுவதாகவும், அவருக்குப் பணிவிடை செய்ய இரண்டு பெண் கைதிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
மேலும் அந்தச் செய்தியில், ஐயான் அலி சிறை வைக்கப்பட்டிருக்கும் அறையில், அவரின் வசதிக்காக தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, உடுத்திக்கொள்ள தினமும் புதிய துணிகள் மற்றும் கைப்பேசிச் சாதனங்களை உபயோகிக்க முடியாதபடி சிறையில் பொருத்தப்பட்டிருக்கும் 'ஜாமர்களை'யும் மீறி பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான கைப்பேசி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சிறை அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர். மேலும், "எல்லா கைதிகளைப் போலவே ஐயான் அலியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் இதர 10 பெண் கைதிகள் உள்ளனர். சிறை விதிகளின்படி, அவருடைய குடும்பத்தினர் அவரை வாரத்துக்கு இரண்டு முறை சந்திக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
16 வயதில் பேஷன் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த ஐயான் அலி, தற்போது பாகிஸ்தானில் முன்னணி மாடலாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.