உலகம்

கிழக்கு உக்ரைனில் இன்று பொது வாக்கெடுப்பு: அரசுப் படைகள், எதிர்ப்பாளர்கள் மோதலால் பதற்றம்

செய்திப்பிரிவு

கிழக்கு உக்ரைனில் அரசு எதிர்ப்பாளர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அப்பகுதியில் அரசு படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சனிக்கிழமை சண்டை நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டுக் குழப்பம் காரணமாக உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் கடந்த ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அர்ஜெனி யாட்செனியுக் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றினர். அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அப்பகுதி ரஷ்யாவுடன் இணைக்கப் பட்டது.

இந்நிலையில் ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தற்போது கிளர்ச்சி வெடித்துள்ளது. அங்கு அரசு எதிர்ப்பாளர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

உக்ரைனில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படுவோம் என்று எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ள னர். கிழக்குப் பகுதியின் பெரும்பாலான நகரங்கள் எதிர்ப்பாளர்கள் வசம் உள்ளன. அந்தப்பகுதிகளில் அரசுப் படையினருக்கும் எதிர்ப்பாளர் களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மோதல் சனிக்கிழமை தீவிரமானது.

டோன்ஸ்க் நகர வீதிகளில் ரோந்து செல்ல முயன்ற அரசு படையினரை எதிர்ப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர். பல்வேறு இடங்களில் துப்பாக்கி சண்டைகள் நடைபெற்றன. இதனால் கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT