உலகம்

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்பு

ராய்ட்டர்ஸ்

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து 80 மணி நேரத்துக்குப் பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25-ம் தேதி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4,600 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 28 வயது இளைஞர் ஒருவர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரிஷி கனால் என்ற அந்த இளைஞர் 80 மணி நேரமாக உணவு, தண்ணீர் என எதுவுமே இல்லாமல் ரிஷி தவிப்புக்குள்ளாகியுள்ளார்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர் கிடைத்த வழிகளில் எல்லாம் முன்னேறி ஒரு வழியாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மீட்புக் குழுவினர் நடமாட்டம் சத்தம் கேட்கவே ரிஷி உதவிக் குரல் எழுப்பியிருக்கிறார். அவரது குரலைக் கேட்டு இடிபாடுகளை அகற்றி 5 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்புக் குழுவினர் அவரை பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர்.

ரிஷி கனாலை பரிசோதித்த மருத்துவர் அகிலேஷ் ஸ்ரீஸ்தா கூறும்போது, "அந்த இளைஞர் அவரது மன உறுதி காரணமாகவே 80 மணி நேரம் உணவு, தண்ணீர் இல்லாமல் உயிர் பிழைத்திருக்கிறார்" என்றார்.

இருப்பினும் ரிஷி கனாலுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT