உலகம்

ராஜபக்ச சகோதரர் பசில் சிறையிலடைப்பு: மற்றொரு சகோதரர் கோத்தபயவிடம் தீவிர விசாரணை

பிடிஐ

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சகோதரர் கோத்தபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி யில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். மகிந்த ராஜபக்ச தோல்வியை தழுவினார்.

இதைத் தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தினர் மீது பல்வேறு புகார் கள் எழுந்தன. மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராக பசில் பணியாற்றினார். அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்குச் சென்றார்.

வீட்டு வசதி திட்ட மோசடி

கடந்த 3 மாதங்கள் அமெரிக்கா வில் தங்கியிருந்த அவர் கடந்த 21-ம் தேதி நாடு திரும்பினார். அவர் அமைச்சராக இருந்தபோது வீட்டு வசதி திட்டத்தில் ரூ.3 கோடியே 18 லட்சம் நிதிமோசடியில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்றுமுன் தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றுமாறு கோரினார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து நேற்று அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கோத்தபயவிடம் விசாரணை

மகிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதரர் கோத்தபய ராஜபக்ச நேற்று ஊழல் தடுப்பு விசாரணை ஆணையத்திடம் ஆஜரானார்.

கடந்த ஆட்சியில் பாதுகாப்புத் துறை செயலாளராக அவர் இருந்தபோது ஆயுதங்கள் கொள்முதலில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவை தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தனது பதவிக் காலத்தின்போது எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று ஆணையம் முன்பு கோத்தபய விளக்கம் அளித்தார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் கோரினார். அவரது கோரிக்கையை ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதனிடையே கோத்தபய கைது செய்யப்படக்கூடும் என்று தகவல் பரவியதால் அவரது ஆதரவாளர்கள் ஆணையத்தின் முன்பு பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிந்த ராஜபக்ச கண்டனம்

இதுவரை வழக்குகள் மட்டுமே போடப்பட்டு வந்த நிலையில் பசில் கைது செய்யப்பட்டிருப்பது ராஜபக்ச குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: தற்போதைய அரசு என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்கி வருகிறது, நான் புத்த மடாலயத்துக்கு சென்றால்கூட அங்கு புத்த பிக்குக்கு லஞ்சம் கொடுத்ததாக இப்போதைய ஆட்சியாளர்கள் கூறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT