ஏமனின் முக்கிய துறைமுக பகுதியான ஏடனில் ஹவுத்தி கிளர்ச்சிப்படைக்கு ஆதரவான ராணுவம் தொடர் முன்னேற்றம் கண்டுவருகிறது. இதனால் ஏமன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்கிட செஞ்சிலுவை சங்கத்துக்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
ஏமனில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து அதிபர் ஹதி ஆதரவான படைகளும் வளைகுடா கூட்டு படைகளும் இணைந்து ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஆதரவான ராணுவத்துடன் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கடந்த 11 நள்ளிரவுகளில் அங்கு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் ஏமன் உருக்குலைந்துள்ளது.
ஏமனின் ஏடன் மற்றும் முல்லா துறைமுக பகுதிகளில் ஹவுத்திக்கள் முன்னேற்றம் அடைவதாக செய்திகள் வெளியாகின. தொடர் வான்வழித் தாக்குதலையும் மீறி ஹவுத்திக்கள் முன்னேறுவதை அடுத்து அங்கிருந்து அதிபர் மன்சூர் ஹதி ஆதரவாளர்கள் சவுதி அரேபியாவுக்கு தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடனில் மட்டும் குறைந்தது 185 பேர் உயிரிழந்ததாகவும், 1,282 பேர் காயங்களுடம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நகர சுகாதாரத்துறை தலைவர் அல்-கதீர் லசூர் தெரிவித்திருக்கிறார்.
செஞ்சிலுவை சங்கங்களுக்கு அனுமதி:
ஏமனில் விமானம் மூலம் உணவு, மருத்துவ பொருட்கள் வழங்குவதுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. யூகிக்க முடியாத வான்வழித் தாக்குதலால் இந்த தடை நிலவியது.
இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கங்கள் மருத்துவப் பொருட்களை விநியோகம் செய்யவும், மக்களிடையே நேரடியாக சென்று உதவிகள் அளிக்கவும் சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக செஞ்சிலுவை செய்தித் தொடர்பாளர் சித்தாரா ஜபீன் கூறும்போது, "உதவிகளை வழங்க இரண்டு விமானங்களை பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் தேவையான பொருட்களும் மற்றொன்றில் அதிகாரிகளும் உள்ளனர். தடை தளர்க்கப்பட்டதை அடுத்து திங்கட்கிழமை காலை முதல் உதவிகளை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்" என்றார்.