தங்களது முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக, பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பழங்குடியின பள்ளத்தாக்குகளில் வேரூன்றிய தெகிரிக் - இ - தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் கிளை தங்களது இயக்கத்தை வலுவானதாக நிருபிக்கும் விதமாக தற்போது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டு இந்த இயக்கம் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் தயாரிப்பு வேலைகளை முடித்து, 'ஒமர்-1' என்ற ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இதில் வெற்றி கண்டதாக அந்த இயக்கம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததற்கான வீடியோ ஆதாரத்தை அந்த இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில், 'ஒமர்-1' ஏவுகணையின் பாகங்களை தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஏவுகணை குறித்து வீடியோவில் பேசும் அந்த அமைப்பின் தொழில்நுட்ப செய்தித் தொடர்பாளர் முகமது குரஸ்ஸினி, "ஒமர்-1 மிக எளிதாக பிரிக்கவும் சேர்க்கவும் கூடியவை. கடவுளின் அருளால் எங்களது எதிரிகள் பயந்து ஓடப் போகும் காலம் வந்துவிட்டது.
அதிகபட்ச பலன்களை பெற போராளிகளுக்கு நாங்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகிறோம்" என்றார்.