நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்ற நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன.
அந்த நாட்டில் தொடர்ந்து நிலஅதிர்வுகள் நீடித்து வருகின்றன. நேற்று இரவும் ஆங்காங்கே நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் நேபாள மக்கள் மேலும் துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எஞ்சிய சில வீடுகளும் நொறுங்கி விழுவதால் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்தாலும், மலை பிரதேசம் என்பதால் பல சிக்கல்களை பேரிடர் மீட்புப் படையினர் சந்திக்கின்றனர்.
தாமதமாகும் மீட்பு பணியினால் பலி எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேபாள உள்துறை அமைச்சக அறிக்கைபடி, பலியானோர் எண்ணிக்கை 4,347-ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 7,500-க்கும் அதிகமாகவும் உள்ளது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குறைந்தது 10 பேர் பலியானதாக கண்டறியப்பட்டது. பலர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.