உலகம்

புளூட்டோ கிரகத்தின் முதல் வண்ணப் படம்: நாசா விண்கலம் அனுப்பியது

பிடிஐ

விண்வெளியில் உள்ள மிகச் சிறிய கிரகமான புளூட்டோ கிரகத்தின் முதல் வண்ணப் புகைப்படத்தை நாசா விண்கலம் 'நியூ ஹரைசன்ஸ்' அனுப்பியது. அதில் புளூட்டோ கிரகம் மற்றும் அதனுடைய நிலவான சரான் ஆகியவை பதிவாகியுள்ளன.

'நியூ ஹரைசன்ஸ்' விண்கலம் கடந்த 2006ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது. அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்தப் புகைப்படம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை புளூட்டோ கிரகத்தில் இருந்து 115 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து அந்த விண்கலம் படம் பிடித்துள்ளது.

இதுகுறித்து நாசாவின் கோள் அறிவியல் பிரிவு இயக்குநர் ஜிம் கிரீன் கூறியதாவது:

எங்களுக்குத் தற்போது கிடைத்துள்ள படம் சற்று மங்கலாகத் தெரிகிறது. எனினும் அதிலேயே புளூட்டோ கிரகத்துக்கும் அதனுடைய நிலவான சரானுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் புலப்படுகின்றன.

இந்த இரண்டுக்கும் இடையில் நிற வேறுபாடுகள் தெரிகின்றன. அதற்குக் காரணம் இரண்டின் உள்ளடக்கமும் வேறாக இருக்கலாம். அல்லது சரான் நிலவில் இதுவரை அடையாளம் காணப்படாத வளிமண்டலத்தின் காரணமாகவும் வண்ண வேறுபாடுகள் தெரியலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

'நியூ ஹரைசன்ஸ்' விண்கலம் அந்த கிரகத்தை நோக்கி இன்னும் நெருங்கிச் செல்லும்போது நமக்கு இன்னும் நல்ல தரத்தில் படங்கள் கிடைக்கும். அப்போது மேற்கண்ட சந்தேகங்கள் நிவர்த்தி ஆகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT