நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா நேற்று வேதனையுடன் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ள கொய்ராலா, கூடாரம், மருந்துப் பொருட்களை தாராளமாக வழங்குமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து சுஷில் கொய்ராலா அளித்த பேட்டியில் கூறியதாவது:
நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடிந்தவரை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவி கோரப்படுகின்றன. ஆனால், நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் படையினருக்கான பற்றாக் குறை நிலவுவதால் அனைத்து பகுதிகளுக்கும் உதவுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் இடிபாடு களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள் வது சவாலானதாக இருக்கும்.
தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் வீடுகளுக்குள் செல்ல முடியாமலும், வீடுகள் இடிந்துவிட்டதாலும் ஆயிரக்கணக் கானோர் மழை, குளிருக்கு நடுவே திறந்தவெளியிலேயே தங்கி உள்ளனர். எனவே, தற்காலிக கூடாரங்கள், மருந்துப் பொருட் களை உலக நாடுகள் அனுப்பி வைத்து உதவ வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும் பல இடங்களில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புறங்களிலிருந்து சரியான தகவல் கிடைக்காததாலும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத் தைத் தொடும் என அஞ்சப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் கடந்த சனிக் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக் கத்தால் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 4,352 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வும், 8,063 பேர் காயமடைந்துள்ள தாகவும் அந்நாட்டு உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கானோர் மழை, பனிப்பொழிவுக்கு நடுவே திறந்தவெளியிலேயே தங்கி உள்ளனர். மேலும் பல பகுதிகளில் இந்தியர்கள் உள்ளிட்டோர் குடி நீர், உணவுப்பொருள், மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி களின்றி தவித்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிவா ரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன. மின்சாரம், தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப் பட்டுள்ளன.
நிலநடுக்கத்துக்கு 60 மாவட் டங்களும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சிந்துபால்சவுக், காத் மாண்டு, நுவாகோட், தாதிங், பக்தாபூர், கூர்க்கா, காவ்ரே, லலித்பூர் மற்றும் ரசுவா ஆகிய 9 மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
மீட்புப் பணியில் பொதுமக்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் அரசு காலதாம தம் செய்வதால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், இடிபாடுகளை அகற்றும் பணியில் பொதுமக்களே ஈடுபடத் தொடங்கினர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, “அரசின் உதவிக்காக காத்திருப்பதைவிட நாங்களே அந்தப் பணியைச் செய்வது சிறந்தது. இப்போதைக்கு எங்கள் கைகள்தான் இயந்திரம்” என்றனர்.
கடந்த 1934-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 8,500 பேர் பலியாயினர். இப்போதைய நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடுமானால் இமாலய மலைப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படும்.