போர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய அரசிடம் அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமள வில் நிதியுதவி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில் கிரீன்பீஸ் இந்தியா என்ற அமைப்பின் பதிவை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் போர்டு அறக் கட்டளையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சமூக சேவகர் தீஸ்தா சீதல்வாட்டின் நடவடிக்கைகளுக்கு போர்டு இந்தியா ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக குஜராத் மாநில அரசு மத்திய அரசிடம் தகவல் தெரிவித்தது.
இதன்பேரிலேயே போர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:
தொண்டு நிறுவனங்கள் மீதான இந்திய அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏற்கெனவே கிரீன்பீஸ் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது போர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.