இராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 74 பேர் கொல்லப் பட்டனர். தீவிரவாத சம்பவத்தில் ஒரே நாளில் இவ்வளவு பேர் கொல்லப்பட்டது கடந்த 7 மாதங்களில் இதுவே அதிகம்.
தலைநகர் பாக்தாதின் வடபகுதியில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக் கும் கதிமியா பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை புதன்கிழமை வெடிக்கச் செய்தார். இதில் 16 பேர் கொல்லப் பட்டனர். 52 பேர் காயமடைந்தனர் என பாதுகாப்புப் படையினரும் மருத்துவ அதிகாரிகளும் தெரிவித்தனர்.
அதே நாளில் அமின், சாத் சிட்டி மற்றும் ஜிஹாத் ஆகிய 3 மாவட் டங்களிலும் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். பாக்தாத் நகரிலும் அதை ஒட்டிய பகுதியிலும் துப்பாக்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நிகழும் மோசுல் நகரில் தற்கொலைப்படையினரால் நிகழ்த்தப்பட்ட 2 கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 14 வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் பலியாயினர். இதுபோல் நினேவ், கிர்குக், சலாஹிதீன் ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற தாக்குதல் உட்பட நாடு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 74 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. ஆனால், சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா பிரிவினரைக் குறிவைத்து நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றது. இதன் அடிப்படையில், மூன்றாவது முறையாக தனது தலைமையில் கூட்டணி அரசை அமைக்க இப்போதைய பிரதமர் நூரி அல் மாலிகி பிற அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இவரது இந்த முயற் சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.