உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட் டிருந்த ராணுவத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கையை தொடங்கி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு பெற்ற ஆயுதப் படையினர், அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதையடுத்து உக்ரைனையொட்டிய எல்லைப் பகுதியில் ரஷ்ய அரசு, தனது படையை குவித்து வைத்தது. இதை மேற்கத்திய நாடுகள் கடுமையாக விமர்சித்து வந்தன.
பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படையை வாபஸ் பெறப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து படையினரை திரும்ப அழைக்கும் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரையான்ஸ்க், பெல்கோராட், ரோஸ்டாவ் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால முகாம்களை அகற்றிவிட்டதாகவும், அங்கிருந்த வீரர்கள் முந்தைய முகாம்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் பாது காப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
உக்ரைன் எல்லையில் 40 ஆயிரம் வீரர்களை ரஷ்யா நிறுத்திவைத்துள்ளதாகவும், புதினின் உத்தரவுக்குப் பிறகும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில் படைகளை வாபஸ் பெறும் பணி தொடங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இப்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.