இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐ.நா. சபை விசாரணை அறிக்கை வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது சுமார் 40 ஆயிரம் தமிழர்களை அந்த நாட்டு ராணுவம் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை நடத்தியது.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனை அண்மையில் சந்தித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, போர்க்குற்ற விசாரணை அறிக்கையை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட் மேன் தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக் கிறார். அவர் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் ஆட்சி மாற்றத் துக்குப் பிறகு வடக்கு மாகாண நிலைமைகள் குறித்து ஆய்வு செய் வதற்காக ஜெப்ரி பெல்ட்மேன் இங்கு வந்துள்ளார். வடக்கு மாகாண மக்களின் நிலைமை குறித்து என்னிடம் கேட்டறிந்தார்.
போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் அறிக்கை செப்டம் பரில் வெளியிடப்படும் என்று ஜெப்ரி உறுதியளித்துள்ளார்.
இப்போது அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருப்பது இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு. இந்த வாய்ப்பினை அரசு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி, நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றார்.