புதிய மற்றும் புதுமையான தொழில்களுக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூல் 3 லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு இந்த ஆண்டு 4 இந்தியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஹார்வர்டு எம்.பி.ஏ. மாணவர் அம்ரிதா சியாகல், சோஷியல் என்டர்பிரைஸ் பிரிவில் முதல் பரிசை பெற்றார். இவர் கிரிஸ்டின் ககெட்சு என்ற ஆரகிள் இன்ஜினீயருடன் சேர்ந்து ‘சாத்தி’ என்ற தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
வாழை மட்டை நாரில் இருந்து தயாரிக்கப் பட்ட ‘சானிடரி பேடு’களை இந்தியாவின் கிராமப்புற பெண்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருவதற்காக இவர்கள் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அம்ரிதா, கிரிஸ்டின் ஆகிய இருவரும் சென்னை எம்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர்கள். இவர்கள் இருவரும் 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 30 லட்சம்) பரிசு பெற்றனர்.
‘பிசினஸ் ட்ராக்’ பிரிவில் ஆல்பிரெட் என்ற தொழில் நிறுவனத்தை தொடங்கிய சௌரப் மகாஜன், மார்செலா சபோன், ஜெஸ் பெக் ஆகிய மூவரும் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘ஆல்பிரட்’ குழுவும் 50 ஆயிரம் டாலர் பரிசு பெற்றது.
சோஷியல் என்டர்பிரைஸ் பிரிவில் ‘டொமடோ ஜாஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய எம்.பி.ஏ. மாணவர்கள் மீரா மேத்தா, மைக் லாரன்ஸ் ஆகியோர் இரண்டாவது பரிசு பெற்றனர்.
பிஸினஸ் பிரிவில் ‘பூயா பிட்னெஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய ப்ரீத்தர் குமார் இரண்டாவது பரிசு பெற்றார். இவருக்கு 25 ஆயிரம் டாலர் (ரூ.15 லட்சம்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.