ரஷ்யாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் விளாடிமர் புடின் தனது சம்பளத்தை 10 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகள் பலரது சம்பளமும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு அளித்து வரும் ஆதரவால் ரஷ்யாவுக்கான மேற்கத்திய நாடுகளின் முதலீடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு நிகராகவும் அந்நாட்டுச் செலாவணி ருபெல்லின் மதிப்பும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பின்மையையும் ரஷ்யா சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தனது சம்பளத்தை 10 சதவீதம் குறைத்துக் கொள்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.
அதேப் போல, பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சட்ட அமைச்சர் யூரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் தங்களது சம்பளத்திலிருந்து 10 சதவீதத்தை குறைத்து வாங்கிக் கொள்ள ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
அதிபர் அலுவலக ஊழியர்கள், அமைச்சரவை உறுப்பினர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ல் ரஷ்ய அதிபர் புடினின் சம்பளத்தை மும்மடங்கு உயர்த்த இருப்பதாக ரஷ்ய க்ரெம்லின் அறிவித்தது. அப்போது அதற்கு பதில் அளிக்கும் வகையில், தான் முடிந்த அளவில் எளிமையான பட்ஜெட்டில் வாழ்க்கை நடத்துவதாகவும், தனது வருவாய் அமைச்சர்களைக் காட்டிலும் குறைவானது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.