போகோ ஹராம் இயக்கத்துக்கு எப்படி நிதி கிடைக்கிறது?
அவ்வப்போது வங்கிகளைக் கொள்ளையடிக்கிறது. வணிகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரை பயமுறுத்தி பணம் பறிக்கிறது. “பணம் கொடுக்காவிட்டால் கடத்தி விடுவோம்’’ என்பதுதான் அச்சுறுத்தல்.
சில சமயம் பெரும் தொழில் அதிபர்களை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களைப் பணயக் கைதிகளாக்கி பணம் பெறுவதும் உண்டு. வெளிநாட்டு செல்வந்தர்கள் என்றால் அதற்கான ரேட் அதிகம். சமீபத்தில் பிரெஞ்சு குடும்பம் ஒன்றை பணயக் கைதிகளாக்கி 30 லட்சம் டாலர்களைப் பறித்தது போகோ ஹராம்.
லிபியாவில் ஆயுத சப்ளைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவிகள் கடத்தலுக்கு சிபோக் பகுதியை எதற்காக போகோ ஹராம் தேர்ந்தெடுத்தது?
அது ஒரு கிராமம். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமம்.
அல் காய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளது போகோ ஹராம் என்று கூறப்பட்டது ஒருபுறம் இருக்க, போகோ ஹராம் தலைவர் வேறொரு வெடிகுண்டையும் வீசி இருக்கிறார்.
‘’ஐ.எஸ். அமைப்புக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு’’ என்றிருக்கிறார். இராக், சிரியா பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் அமைப்பு ஐ.எஸ். இப்படி அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.எஸ்.போராளிகளின் ஆதரவைத் தாங்கள் பெற முடியும் என்று நம்புகிறது போகோ ஹராம்.
தவிர பாரிஸ் நகரில் பத்திரிகை அலுவலகத்தின்மீது நடந்த தாக்குதலை யும் அரபு மொழியிலேயே பாராட்டி யிருக்கிறார் போகோ ஹராம் தலைவர்.
இதன் மூலம் உலக அளவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் ஆதரவை போகோ ஹராம் நாடியிருக்கிறது என்றும் சொல்லலாம். போகோ ஹராம், நைஜீரிய அரசுக்கு பெரும் தலைவலியாய் மாறிவருகிறது. 2009-ம் ஆண்டு முதல் தீவிரமாக இயங்கும் இவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவிக்கிறார்கள்.
இவர்களின் நோக்கம்தான் என்ன? இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு முழுமையான முஸ்லிம் அரசுதான் நைஜீரியாவில் ஆட்சி செய்ய வேண்டும் - இதுதான் அந்தத் தீவிரவாதிகளின் ஒரே நோக்கம். ஒவ்வொரு மாதமும் நூற்றுக் கணக்கானவர்களைக் கொல்கிறார்கள்.
நைஜீரிய ராணுவம் சமீபத்தில் போகோ ஹராம் இயக்கத்தில் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை கண்டுபிடித்தது. புனி-யாழி என்ற நகரத்தில் உள்ள உரத் தயாரிப்புத் தொழிற்சாலைக்குள் அடக்கமாக இது மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
ஐ.எஸ்.அமைப்பு போகோ ஹராமின் ஆதரவை மனப்பூர்வமாக வரவேற்றிருக்கிறது. போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெக்காவுவைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. நிழல் மனிதராகவே இருக்கிறார். எப்போதாவது ஒரு முறை அவராகவே வீடியோவில் தகவல்களை அனுப்பும்போது அவரை அறிய முடிகிறது.
நைஜர் நதிக்கரையில் உள்ள ஷெக்காவு என்ற கிராமத்தில் பிறந்தவர். இஸ்லாமிய உயர் கல்வி பயின்றவர். பல மொழிகள் தெரியும். ஆனால் அந்தப் பட்டியலில் ஆங்கிலம் இல்லை. அவர் வயது 38லிருந்து 40க்குள். தனிமை மிகவும் பிடிக்கும். மாறுவேடம் போடுவதில் கில்லாடி. பல பெயர்கள் உள்ளவர்.
போகோ ஹராம் இயக்கத்தை உருவாக்கியவரின் பெயர் முகம்மது யூசுப். என்றாலும் தளபதி அளவுக்குப் அவரால் புகழ்பெற முடியவில்லை. அந்தத் தளபதிதான் அபுபக்கர் ஷெக்காவு.
2009-ல் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 700 போகோ ஹராம் இயக்கத்தினர் இறந்தனர். அவர்களில் ஒருவர் முகம்மது யூசுப்.
2012 செப்டம்பரில் ஷெக்காவுவைப் பிடித்துவிட்டது ராணுவம். அதாவது கிட்டத்தட்ட பிடித்து `விட்டது’. தனது 7 வயது குழந்தைக்குப் பெயரிடும் விழாவுக்கு வந்திருந்தார் அவர். ஆனாலும் தப்பித்து விட்டார். ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் ராணுவம் அழைத்துச் சென்றது.
இப்போதைக்கு நைஜீரியா மட்டும்தான் போகோ ஹராமின் இலக்கு. என்றாலும் மாலி, நைஜர் ஆகிய நாடுகளில் உள்ள தீவிர இஸ்லாமியக் குழுக்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. கேமரூன் தேசத்திலும் இது ஊடுருவி இருப்பதால் அங்கும் போகோ ஹராம் குறித்த அச்சம் நிலவுகிறது.
மே 2013 அன்றே முன்னறிவிப்பு கொடுத்து விட்டார் அபுபக்கர் ஷெக்காவு. “இனிமேல் பள்ளிகளில் படிக்கும் பெண்களை கடத்தப் போகிறேன்’’.
சென்ற வருடம் ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஓர் அறிவிப்பை வெளியிட்டது. “ஷெக்காவு இருக்கும் இடத்தைப் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு 70 மில்லியன் டாலர் பரிசுத் தொகை உண்டு’’.
தீவிரவாதம் என்பது ஏதோ ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. தீவிரவாதம் எல்லை தாண்டியது என்பதால் அந்த விதத்தில் மொத்த உலகமுமே கவனம் செலுத்தி வருகிறது.
(உலகம் உருளும்)