அமெரிக்க சுகாதாரத்துறையின் தலைமைப் பதவிக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் மூர்த்தியை, அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். அவரை அப்பதவிக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் சில அமெரிக்க எம்.பி.க்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னணி மருத்துவ இதழான நியூ இங்லண்ட் மெடிக்கல் ஜர்னல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பிறந்த விவேக் மூர்த்தி(36), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். விவேக் மூர்த்தியை அமெரிக்க சுகாதாரத்துறையின் தலைமைப் பதவிக்கு (சர்ஜன் ஜெனரல்) அதிபர் பராக் ஒபாமா பரிந்துரைத்தார்.
இப்பரிந்துரையை அமெரிக்க செனட் ஒப்புக்கொள்ளும் பட்சத் தில் அப்பதவிக்கு வரும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்ற பெருமையை விவேக் மூர்த்தி பெறுவார். மேலும், அப்பதவியில் அமர்ந்த மிக இளம் வயதினர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கும்.
ஆனால், விவேக் மூர்த்தியின் நியமனத்துக்கு முட்டுக் கட்டை போட சில எம்.பி.க்கள் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நியூ இங்லண்ட் மெடிக்கல் ஜர்னல் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக அதன் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
விவேக் மூர்த்தியின் நியமனத்துக்கு என்ஆர்ஏ-வின் எதிர்ப்பு காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் மருத்துவத்துறை நண்பர்களுக்கு பெரும் வருத்தமளிக்கக் கூடிய ஒன்றாகும். அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட ஒபாமா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்கு விவேக் மூர்த்தி கருத்து அடிப்படையில் ஆதரவளித்தார்.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர், துப்பாக்கி வன்முறையால் உயிரிழக் கின்றனர். ஆகவே, துப்பாக்கி ஒழுங்குமுறை, தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்குத் தடை, வரையறுக்கப்பட்ட வெடிப் பொருள்கள் விற்பனை, போதிய பாதுகாப்பு பயிற்சி போன்ற வற்றுக்கு மூர்த்தி நியாயமான காரணங்களின் அடிப்படையில் ஆதரவளித்தார்.
இது, தேசிய துப்பாக்கி உரிமை யாளர்கள் சங்கத்திற்கு (எஆர்ஏ) கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆகவே, விவேக்கை தலைமைப் பதவிக்கு வரவிடாமல் செய்வதற் கான முயற்சியின் பின்னணியில் என்.ஆர்.ஏ. இருக்கிறது. விவேக் பொறுப்பேற்கவுள்ள துறைக்கும், துப்பாக்கிகள் விவகாரத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இருப்பினும் அவரை அப்பதவிக்கு வரவிடாமல் செய்ய முயற்சி நடக்கிறது.
விவேக்கின் நியமனத்திற்கு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிக்கத் தயாராகவுள்ளனர். அதிபரின் பரிந்துரையையும் மீறி, என்ஆர்ஏ இவ்விஷயத்தில் தலையிடுவது, புதிய வகை மிரட்டல்பாணி அரசியல். சுகா தாரத்துறையின் முந்தைய தலை வர்களின் செயல்பாட்டின் அடிப் படையிலும் தேச நலனுக்கு நன்மை பயக்கும் வகையிலும் தங்களின் மனசாட்சிக்கு உட்பட்டு செனட் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.