மே 26-ல் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
சீனா சென்றிருந்த ராஜபக்சே, நேற்றிரவு கொழும்பு திரும்பினார். கொழும்பு திரும்பியவுடன் அவர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவின் ட்விட்டர் பதிவு: "@நரேந்திர மோடி - பதவியேற்பு விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. விழாவில் கலந்து கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மோடி, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைவர்கள் எதிர்ப்பு:
அந்த வகையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
நேற்று (வியாழக்கிழமை) இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ராஜபக்சே அழைக்கப்படாமல் இருந்திருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இன அழிப்பில் இறங்கிய ஒருவர் இடம் பெற வேண்டுமா என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென என திமுக தலைவர் கருணாநிதி இன்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஸ்வரனுக்கு அழைப்பு:
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தன்னுடன் இணைந்து கலந்து கொள்ளுமாறு இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, அதிபரின் செய்தித் தொடர்பாளர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அதிபர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து வடக்கு மாகாண முதல்வர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை வடக்கு மாகாண முதல்வருமான விக்னேஸ்வரன் கூறுகையில்:இலங்கை அதிபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை பற்றி மாகாண கவுன்சில் உறுப்பினர்களுடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.