'தி இன்டர்வியூ' திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட 10,000 பலூன்கள் தென் கொரியாவில் தயாராக இருக்கும் நிலையில், பலூன்கள் எல்லைப் பக்கம் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வட கொரியாவின் மக்கள் படை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "எல்லையில் வீரர்கள் சீற காத்திருக்கின்றனர். வட கொரியாவின் பக்கம் ஒரு பலூன் பறந்து வந்தாலும் எந்தவித எச்சரிக்கையும் இன்றி சுட்டு வீழ்த்தப்படும்.
வட கொரியாவை ஆத்திரமூட்டினால் பயங்கரமான அபாயத்தை சந்திக்க நேரிடும். தயார் நிலையில் உள்ள வீரர்கள் யுத்தத்துக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்த 'தி இன்டர்வியூ' திரைப்படம் பல சர்ச்சைகளுக்கிடையே வெளியான நிலையிலும் தொடர்ந்து இந்த படத்தால் இரு கொரிய நாடுகளுக்கு வாய்ச் சண்டை நீடிக்கிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட 'தி இன்டர்வியூ' திரைப்படத்தின் டி.வி.டி-க்களை பலூன்களில் கட்டி வட கொரியாவுக்குப் பரப்ப, அதன் பகை நாடான தென் கொரியாவின் சில அமைப்புகள் திட்டமிட்டன.
தற்போது தயார் நிலையில் உள்ள இந்த பலூன்களும் 5 லட்சம் துண்டுப் பிரசுரங்களும் மார்ச் 26-ஆம் தேதி வட கொரியா நோக்கி பறக்கவிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.