இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியப் பிரதமராகப் பதவியேற்க உள்ள மோடியுடன் அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். இருநாட்டு சமூக, பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் புதிய பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வர வேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் அவருக்கு ஏ-1 விசா வழங்கப்படும். இவ்வாறு ஜென் சாகி தெரிவித்தார்.
2002 குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து வந்தது. அவர் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டதைத் தொடர்ந்து இந்தியா வுக்கான அமெரிக்க தூதர் மற்றும் மூத்த அதிகாரிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்துப் பேசினர். தற்போது அதிபர் ஒபாமாவே நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து
சிங்கப்பூர் பிரதமர் லீ ஷீன் லூங் பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சிங்கப்பூர் உறவை வலுப்படுத்தும் வகையில் விரைவில் புதிய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ட்விட்டர் இணையதளத்திலும், இதே கருத்தை லீ ஷீன் லூங் பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த மோடி, “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியாவின் மதிப்புமிகு நண்பன் சிங்கப்பூர். வரும் காலத்தில் இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.
நவாஸ் அழைப்பு
மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்தத் தகவல் பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடலின்போது, பாகிஸ்தானுக்கு வருமாறு மோடிக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கேமரூன் வாழ்த்து
மோடி, பாஜகவுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ட்விட்டர் சமூக இணையதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா-பிரிட்டன் உறவு மேம்பட தொடர்ந்து இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் கூறுகையில், “மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக அமையவுள்ள இந்திய அரசுடன் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் பிரிட்டன் இணைந்து செயல்பட விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா ஆகியோரும் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.