2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் என்று கருதப்படும் லக்வி, பாக் சிறையில் சகலவசதிகளுடன் இருக்கிறார்.
இது குறித்து பிபிசி உருது வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தானின் கொடூரமான கைதி லக்வி, ராவல்பிண்டியில் உள்ள அதி-பாதுகாப்பு அடியாலா சிறையில் சகல வசதிகளுடன் இருந்து வருகிறார்.” என்று கூறியுள்ளது.
இணையதள வசதி, மொபைல் போன் வசதி, பார்க்க வருகையாளர்கள் என்று எந்த விதத்திலும் அது சிறைத் தண்டனையாக இருக்கவில்லை என்கிறது அந்தச் செய்தி.
லக்வியுடன் அப்துல் வாஜித், மஷர் இக்பால், ஹமத் அமின் சாதிக், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஜமில் அகமது, யூனுஸ் அஞ்சும் ஆகியோர் மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகிறது.
ஆனாலும், லக்வி மற்றும் இந்த 6 பேர்களும் சிறையில் சிறைஅதிகாரி அறைக்கு அருகில் நிறைய வசதிகள், அறைகளுடன் மிகவும் வசதியாக உலா வருகின்றனர் என்கிறது அந்தச் செய்தி.
“சிறை அதிகாரி அனுமதியுடன் தொலைக்காட்சி, இண்டெர்நெட், மொபைல் போன்கள், தினமும் வருகையாளர்கள் என்று சகலவசதிகளுடன் இவர்கள் இருந்து வருகின்றனர்.” என்று பிபிசி உருது கூறியுள்ளது.
எத்தனை பேர் வேண்டுமானாலும், எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் லக்வியை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அனுமதி தேவையில்லை. தாங்கள் யார் என்று கூற வேண்டிய அவசியமும் இல்லை. என்று கூறியுள்ளது அந்தச் செய்தி.