சுவிட்சர்லாந்தை சேர்ந்த சூரிய சக்தி விமானம் தனது உலகப் பயணத்தை அபுதாபியில் இருந்து நேற்று தொடங்கியது. இந்த விமானம் இன்று இந்தியாவின் ஆமதாபாத் நகருக்கு வருகிறது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆண்ட்ரே போர்ஸ்பெர்க், பெர்னாட் பிக்காட் ஆகிய விமானிகள் சூரிய சக்தியால் இயங்கும் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானத்தை சுமார் 13 ஆண்டுகள் உழைப்பில் தயாரித்துள்ளனர். ஒரு துளி எரிபொருளைக்கூட பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் வகையில் இந்த விமானம் வடிமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியை பெறுவதற்காக விமானத்தின் இறக்கைகளில் 12 ஆயிரம் சூரிய சக்தி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
72 மீட்டர் நீளம் உடைய இறக்கைகள், 2.3 டன் எடை கொண்ட இந்த விமானம் மணிக்கு 50 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சூரிய சக்தியை சேமித்து இரவிலும் பறப்பதற்கு ஏதுவாக விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை தொடர்ந்து 120 மணி நேரம் வரை இயக்கலாம்.
இந்த சூரிய சக்தி விமானம் தனது 5 மாத கால உலகப் பயணத்தை அபுதாபி விமான நிலையத்தில் நேற்று தொடங்கியது. விமானத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் அதனை இயக்குகிறார்.
முதல்கட்டமாக ஓமனில் உள்ள மஸ்கட் நகர விமான நிலையத்தில் ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் தரையிறங்குகிறது. இந்த விமானம் இன்று இந்தியாவின் ஆமதாபாத் (குஜராத்) நகருக்கு வருகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் வரை சீனா, பர்மா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வழியாக உலகின் பல நகரங்களுக்கு விமானம் செல்கிறது.