உலகம்

பாகிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்:ஆளும் கட்சி தலைவர் சுட்டுக் கொலை, ராணுவ தாக்குதலில் 34 தீவிரவாதிகள் பலி

ஐஏஎன்எஸ்

பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஹாஜி சர்தார் முகமதை தலிபான் தீவிரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிர வாதிகள் பலருக்கு தண்டனை வேகமாக நிறைவேற்றப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள தீவிரவாதிகள், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் வடமேற்கில் அமைந்துள்ள பெஷாவர் நகரைச் சேர்ந்தவர் ஹாஜி சர்தார் முகமது. இவர் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக உள்ளார். நேற்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை தீவிரவாதிகள் திடீரென சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாய மடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துக்கு தெஹ்ரி இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர்களை எங்கள் அமைப்பு வேட்டையாடத் தொடங்கிவிட்டது. இனி அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்களை நிறைவேற்றுவோம் என்று அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

34 தீவிரவாதிகள் பலி

ஆளும் கட்சி தலைவர் கொல்லப் பட்ட நேரத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஓட்டிய கைபர் பகுதியில் தலிபான் மற்றும் லஷ்கர்-இ-இஸ்லாம் தீவிரவாதி களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் வான் வழி தாக்கு தல் நடத்தினர்.

தீவிரவாதிகள் மறைந்திருந்த இடங்களை குறி வைத்து விமானங்கள் மூலம் சர மாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் 34 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள்தான் பாகிஸ்தானில் அவ்வப்போது குண்டு வெடிப்புகள், தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்பு 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் மேற்கத்திய நாடு கள் கொடுத்த நெருக்கடி காரண மாக பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் எல்லைப் பகுதியில் தீவிர வாதிகள் மீது தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளது.

9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் நேற்று மேலும் 9 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் 12 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

பாகிஸ்தானில் 6 ஆண்டுகளாக தூக்கு தண்ட னைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பரில் பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 150 பேரை கொன்றதை அடுத்து தூக்கு தண் டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த தீவிரவாதிகள் மற்றும் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நேற்று பஞ்சாப் மாகாணம், லாகூர், ராவல்பிண்டி, பைசாலாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிறைகளில் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பிறகு இதுவரை 48 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர். மரண தண்டனையை எதிர்த்து போராடி வரும் அமைப்பினர் தூக்கு தண் டனையை கண்டித்துள்ளனர். தூக்கு விதிக்கப்பட்டவர்களில் பலர் சித்திரவதை மூலம் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைக்கப்பட் டவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

-பி.டி.ஐ.

SCROLL FOR NEXT