மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜகியூர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தான் சிறையில் இன்டர்நெட், செல் போன், டி.வி. என சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்விவை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய அந்த நாட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு சில வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும்போதே மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்தினார் என்றும் இதன் மூலம் அவருக்கு ஒரு மகன் உள்ளார் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
இப்போதும் அவர் சிறையில் சொகுசாக வாழ்ந்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட லக்வியும் அவரது நண்பர்கள் 6 பேரும் ஒரே சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விருப்பப்படி 7 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களது அறையில் டி.வி. செல்போன், இன்டர்நெட் என சகல வசதிகளும் உள்ளன. லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தலைவரான லக்விக்கு சிறையில் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
நாளொன்றுக்கு அவரை சுமார் 100 பேர் சந்திக்கின்றனர். சிலர் இரவில்கூட சிறைக்கு வருகின்றனர். ஆனால் சிறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வது இல்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருவதாக பாகிஸ்தான் பறைசாற்றி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பாதுகாத்து வருவது பிபிசி செய்தி மூலம் அம்பலமாகி உள்ளது.