மூன்றாம் உலகப் போருக்கு ரஷ்யா வித்திடுகிறது என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக உக்ரைன் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உக்ரைன் பகுதிகளை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் மண்ணிலும் ரஷ்யா கால் பதிக்கும் அபாயம் உள்ளது. இரண்டாம் உலகப் போரை உலகம் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாம் உலகப் போரைத் தொடங்க ரஷ்யா ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது.
உக்ரைனில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. இதன்மூலம் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த அந்த நாடு முயற்சிக்கிறது. இந்த நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச சமூகம் கைகோக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். Dஇதனிடையே உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான கலகக்காரர்களை உக்ரைன் அரசு தூண்டி வருவதால் இந்த போர் பயிற்சி நடைபெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக நேட்டோ குற்றம் சாட்டியுள்ளது