இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு மனித உரிமை ஆர்வலர் ஜெயகுமாரியை (50) விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலேந்திரன் ஜெயகுமாரி. கணவரை இழந்த இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மர்ம நபர் சுட்டதில் மூத்த மகன் உயிரிழந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த இரண்டாவது மகன் போரில் மரணடைந்தார்.
மகனைக் காணவில்லை
மூன்றாவது மகன் மகேந்திரன் 15 வயதாக இருக்கும்போதே விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும் 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின்போது ராணுவத்திடம் அவர் சரண் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அவர் என்னவானார் என்பது இதுவரை மர்மமாக உள்ளது.
காணாமல் போன தனது மகன் எங்கே என்று ராணுவ உயரதிகாரிகளிடம் ஜெயகுமாரி விசாரித்தபோது அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
மகேந்திரனை போன்று ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களோடு இணைந்து ஜெயகுமாரி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இந்நிலையில் கடந்த 2014 மார்ச் 13-ம் தேதி ஜெயகுமாரியை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் தற்போது அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. அதிபர் சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி இலங்கை செல்கிறார்.
மோடியின் வருகையை முன் னிட்டு நல்லெண்ண நடவடிக் கையாக ஜெயகுமாரியை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.