அபுஜாவைத் தலைநகராகக் கொண்ட நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கில் நைஜர், தெற்கில் கினி வளைகுடா, கிழக்கில் சாட் மற்றும் காமரூன் நாடுகள், மேற்கில் பெனின் குடியரசு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு.
அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது. தலைநகர் அபுஜாவின் முக்கிய சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டார் ஒரு முஸ்லிம் பெண்மணி. தலை முதல் கால் வரை கருப்பு வண்ணம் கொண்ட பாரம்பரிய உடை. ஆனால் அவர் தன் உடை மீது ஒரு சிறிய வெள்ளைப் பட்டையை அணிந்திருந்தார். அதில் “எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள்’’ என்ற வார்த்தைகள்.
“எங்களுக்கு எங்கள் மகள்கள் மீண்டும் உயிரோடு வேண்டுமே’’ என்று அவர் பெருங்குரலெடுத்துக் கத்தினார். அவரைச் சுற்றிலும் கூடிய மக்கள் கூட்டம் அவர் கூறுவதை எதிரொலித்தது. அவர்களில் பல பெற்றோர்களும் மார்பைப் பிடித்துக் கொண்டு கதறினர்.
தினமும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன. உணர்ச்சிக் குவியலாக மக்கள். அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அரசுக்கு எதிரான ஊர்வலங்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவில் பொதுத் தேர்தல் வேறு.
‘’எங்கள் மகள்கள் வேண்டும்’’ என்று எதற்காக ஒரு கூட்டமே கதற வேண்டும்? காரணம் 2014 ஏப்ரல் 14 15 தேதிகளில் நடந்த நிகழ்ச்சி.
உலகையே கொந்தளிக்க வைத்த சம்பவம் அது. சிபோக் என்பது நைஜீரியாவில் உள்ள ஒரு நகரம். அங்கு இருக்கிறது அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி. அதன்மீது தாக்குதல் நடத்தினார்கள் போகோ ஹராம் இயக்கத்தினர். அந்தப் பள்ளியின் புதிய வாட்ச்மேன்களை போல நடித்து `உடனடியாக உங்களை வேறு இடத்துக்குப் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டுமென்று அரசு உத்தரவு’ என்றார்கள்.
நாட்டில் அவ்வப்போது கலவரங்கள் நிகழ்வதை அறிந்திருந்த அந்த அப்பாவிப் பெண்களும் அதை நம்பி தீவிரவாதிகள் கொண்டு வந்த டிரக்குகளில் ஏறிக் கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் என்னவானார்கள் என்பது அப்போது தெரியவில்லை.
உண்மையை அறிந்ததும் சிபோக் நகரம் உறைந்து போனது. சொல்லப்போனால் இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பாகவே அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது. காரணம் அந்தப் பகுதியில் நிலவிய அமைதியின்மை. என்றாலும் குறிப்பிட்ட நாட்களில் அறிவியல் பொதுத் தேர்வு நடைபெற்றது. அந்தப் பள்ளி தேர்வு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
எனவே சிபோக்கின் அரசுப் பள்ளி மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்திலிருந்த பல தனியார் பள்ளிகளிலிருந்தும் மாணவிகள் அங்கு வரவேண்டி இருந்தது. பதினாறிலிருந்து பதினெட்டு வயது வரையான அந்த மாணவிகளுக்குதான் இப்படி ஓர் அதிர்ச்சி.
தொடக்கத்தில் 85 மாணவிகள்தான் கடத்திச் செல்லப்பட்டனர் என்றார்கள். அடுத்த நான்கைந்து நாட்களில் 129 என்று இதைத் திருத்தியது ராணுவம். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் 234 என்று புள்ளிவிவரம் கூறி வேதனையை அதிகமாக்கியது அரசு.
காரணம் அத்தனை பெற்றோர் அந்தப் பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற தங்கள் மகளை அதற்குப் பிறகு காணவில்லை என்று புகார் கொடுத்ததுதான். இந்த எண்ணிக்கை உண்மையில் 329 என்றும், அவர்களில் 53 பேர் எப்படியோ சாமர்த்தியமாக தப்பித்துவிட்டனர் என்றும் செய்திகள் உலவுகின்றன.
இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது.
கடத்தப்பட்ட பெண்களின் கதி என்ன? கிடைக்கும் தகவல்கள் பதற்றத்தை அதிகப்படுத்துவதாகவே உள்ளன. முதல் கட்டமாக முஸ்லிம்கள் அல்லாத மாணவிகள் இஸ்லாம் மார்க்கத்துக்கு கட்டாயமாக மாற்றப்படுகிறார்கள்.
பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அது அப்படி ஒன்றும் அதிகமில்லையாம். அந்த விலை கொடுத்து முஸ்லிம்கள் அவர்களை வாங்கிக் கொள்ளலாம். நைஜீரியாவிலேயே இந்த விற்பனையை நடத்தாமல் அதன் பக்கத்து நாடுகளான சார்ட், காமருன் போன்றவற்றில் இந்த விற்பனையை நடத்துகிறார்கள்.
அப்படியானால் முஸ்லிம் மாணவிகளை விட்டுவிடுவார்களா? அதுதான் கிடையாது. இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறவேண்டிய தேவை அவர்களுக்குக் கிடையாது, அவ்வளவுதான். மற்றபடி `பெண்ணாக இருந்தும் படிக்க ஆசைப்பட்டதற்கான’ தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
நைஜீரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள சம்பிஸா காடுதான் போகோ ஹராம் இயக்கத்தின் முக்கியக் களனாக இருக்கிறது. இங்குதான் மாணவிகளுக்கான மதமாற்றமும், விற்பனை ஒப்பந்தங்களும் நடைபெற்றன என்று சில உள்ளூர்வாசிகள் அரசுக்குத் தகவல் அளித்திருக்கிறார்கள்.
மே 4 அன்றுதான் நைஜீரிய அதிபர் ஜோனாதன் மாணவிகள் கடத்தலைப் பற்றி முதன்முறையாக வாய் திறந்தார். இந்தத் தாமதமே மக்களுக்கு கடும் எரிச்சலைத் தந்தது. “கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அரசு எல்லாவிதங்களிலும் முயற்சிக்கும்’’ என்று அவர் கூறிய உறுதிமொழி யாருக்கும் (முக்கியமாக மகளை இழந்த பெற்றோர்களுக்கு) ஆறுதல் அளிக்கவில்லை.
போகோஹராம்தான் கடத்தலுக்குக் காரணமா என்று அதன் ஆதரவாளர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இதில் சந்தேகமே வேண்டாம் என்பதுபோல் மே 5, அன்று ஒரு வீடியோவை வெளியிட்டார் போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் ஷெக்காவு.
(உலகம் உருளும்)