பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள முட்டாஹிடா காவ்மி இயக்கத்தின் (எம்க்யூஎம்) தலைமை அலுவலகத்தில் நேற்று ராணுவத்தினர் நடத்திய அதிரடி சோதனையில் பெருமளவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இவற்றில் பெரும்பாலானவை நேட்டோ படைக்கு அனுப்பிவைக் கப்பட்டதில் இருந்து திருடப் பட்டவை என்பது தெரியவந் துள்ளது. பாகிஸ்தானில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்று ஆயுதக் கிடங்காக செயல்பட்டு வந்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில் எம்க்யூஎம் 4-வது பெரிய கட்சியாகவும், சிந்து மாகாணத்தில் 2-வது பெரிய கட்சியாகவும் உள்ளது. மேலும் கராச்சியில் இக்கட்சி செல்வாக்குடன் திகழ்கிறது. இதன் தலைமை அலுவலகம் கராச்சி நகரில் அஜீஸாபாத் என்ற இடத்தில் உள்ளது. இக்கட்சித் தலைவர் அல்டாஃப் உசேனின் வீடும் இதுவாகும். அல்டாஃப் உசேன் 1990-களில் கராச்சி நகரில் இருந்து வெளியேறி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் எம்க்யூஎம் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை 5 மணி முதல் 2 மணி நேரத்துக்கு இந்த சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து தாஹிர் என்ற ராணுவ அதிகாரி கூறும்போது, “குற்றச் செயல்களில் தொடர்புடை யவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சோதனை மேற்கொண்டோம். இதில் 15 பேரை பிடித்துவந்து விசாரித்து வருகிறோம்.
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம். நேட்டோ படையினரின் திருடுபோன ஆயுதங்களும் அங்கு இருந்தன. இந்த ஆயுதங்கள் கராச்சி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும்போது திருடப்பட்டவை” என்றார்.
இந்நிலையில் சோதனை பற்றி அறிந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன் குவிந்தனர். இதையடுத்து வன்முறை அபாயம் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எம்க்யூஎம் கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் சபஸ்வரி கூறும்போது, “அதிரடி சோதனை என்ற பெயரில் கட்சியின் அப்பாவித் தொண்டர்கள் கொல் லப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை யில் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடனே தலையிடவேண்டும். எங்கள் கட்சி அமைதி வழியில் செயல்பட்டு வருகிறது.
1947-ம் ஆண்டு பிரிவினையின்போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த உருதுபேசும் மக்களுக்காக நாங்கள் போராடி வருகிறோம். இதனால் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
சோதனைக்கு எதிராக தொண்டர்கள் அமைதி வழியில் போராட வேண்டும் என்றும் எம்க்யூஎம் நேற்று கேட்டுக்கொண்டது.