உலகம்

படப்பிடிப்பில் ஹெலிகாப்டர்கள் மோதல்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற இருவர் உட்பட 10 பேர் பலி - ஆர்ஜெண்டீனா மலைப்பகுதியில் துயர சம்பவம்

ஏபி

ஆர்ஜெண்டீனாவில் `ரியாலிட்டி ஷோ’ படப்பிடிப்பின்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2 பேர் உட்பட 10 பேர் பலியாகினர்.

பிரான்ஸின் டி.எப்.1 தொலைக் காட்சி சேனலில் `டிராப்டு’ என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஆர்ஜெண்டீனாவின் வில்லா காஸ்ட்லி என்ற மலைப் பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர்கள் கெமிலி முபாட் (25), அலெக்சிஸ் வாஸ்டின் (28), பிளாரன்ஸ் ஆர்தட் (57) ஆகிய மூவரும் பங்கேற்றனர்.

படப்பிடிப்புக்காக உள்ளூரைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஹெலி காப்டர்கள் எதிர்பாராதவிதமாக நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 3 விளையாட்டு வீரர்கள் உட்பட ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த கெமிலி முபாட் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் நீச்சல் பிரிவில் தங்கம் வென்றவர் ஆவார். அலெக்சிஸ் வாஸ்டின் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை பிரிவில் வெண்கலம் வென்றவர். பிளாரன்ஸ் ஆர்தட் 1990-ல் சோலோ அட்லாண்டிக் படகுப் போட்டியில் முதலிடம் பெற்றவர்.

இவர்களைத் தவிர அர்ஜென் டீனாவை சேர்ந்த 2 விமானிகள், படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த 5 பேரும் விபத்தில் பலியாகி உள்ளனர். விமானிகளை தவிர்த்து மற்ற அனைவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பிரான்ஸ் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு காரணம் என்ன?

சம்பவ பகுதியில் ஆர்ஜெண்டீனா போலீஸாரும் விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்களும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப் பகுதியில் ரியாலிட்டி ஷோ குழுவினர் தண்ணீர் தேடி அலையும் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர்கள் வானில் பறந்த சில நிமிடங்களில் விபத்து நேரிட்டுள்ளது.

அந்த நேரத்தில் வானிலை தெளிவாக இருந்துள்ளது. இதனால் விபத்துக்கு வானிலை காரணம் அல்ல என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே விபத்து குறித்து ஆர்ஜெண்டீனா விமானப் போக்கு வரத்துத் துறை நிபுணர்கள் விசாரணையைத் தொடங்கி யுள்ளனர்.

SCROLL FOR NEXT