உலகம்

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மீது மர்ம நபர் சரமாரி தாக்குதல்

ஐஏஎன்எஸ்

தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் (42) மீது மர்ம நபர் ஒருவர் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் காயமடைந்த அவரது முகத்தில் 80 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் நேற்று கூறியதாவது:

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் லிப்பெர்ட் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அவரது முகம் மற்றும் கையில் கத்தியால் கீறி உள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சிகிச்சையின்போது அவரது முகத்தில் 80 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. எனினும், அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை.

அங்குள்ள தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக அந்த நாட்டு சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து, “தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை கூறும்போது, “அமெரிக்க தூதர் மீது நடத்தப்பட்டி ருப்பது உடல் ரீதியிலான தாக்குதல் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையிலான உறவின் மீதான தாக்குதல் ஆகும். இதை சகித்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்திய நபர் கிம் கி-ஜாங் (55) என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், பிரிந்த கொரியா மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் அமெரிக்க-தென்கொரிய ராணுவ பயிற்சியைக் கண்டித்தும் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் “தென்கொரியாவில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை இருப்பதன் வெளிப்பாடுதான் இந்தத் தாக்குதல்” என வடகொரியா தெரிவித் துள்ளது.

அமெரிக்க ராணுவமும் தென்கொரிய ராணுவமும் சமீபத் தில் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கிய நிலை யில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூதர் லிப்பர்ட், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நெருங்கிய மற்றும் நம்பகமிக்க நண்பர் ஆவார்.

SCROLL FOR NEXT