அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமாவின் உருவத்தை மங்கலாக்கி, தன் அரசு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பவில்லை என்று சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.
சவுதியின் புதிய மன்னர் சல்மானை ஒபாமா - மிஷேல் ஒபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு நடந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட அந்நாட்டு அரசின் 'சவுதி டிவி', அந்த வீடியோ பதிவில் மிஷேல் ஒபாமாவின் உருவத்தை மட்டும் மங்கலாக்கி ஒளிபரப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சவுதி டிவியின் வீடியோவில் மிஷேலின் உருவம் மங்கலாக்கி ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் விமர்சனத்துக்குள்ளானது.
ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் வீடியோ பகிரப்பட்ட நிலையில், சவுதி அரசின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் மிஷேல் ஒபாமா உடை அணிந்திருந்ததால், அவரது உருவம் வீடியோவில் மங்கலாக்கப்பட்டதாக கருத்துக்கள் நிலவின.
மறுபுறம், சவுதியின் கட்டுப்பாட்டு விதிகளைத் தவிர்த்த மிஷேல் ஒபாமாவின் செயலுக்கு பலர் பாராட்டுப் பதிவுகளையும் இட்டனர். இதனால், சர்வதேச அளவில் ட்விட்டரில் இந்த விவகாரம் விவாதத்துக்குள்ளானது.
"மிஷேல் ஒபாமா தனது கூந்தலை மறைத்துக்கொள்ளவில்லை. சவுதியில் இது விதிமீறல். வேறு ஒருவரால் இவ்வாறு தைரியத்துடன் நடந்திருக்க முடியாது" என்று பிரபல ரஷ்ய செய்தி நிறுவனமான 'ஆர்.டி'-யில் செய்தியாளராக இருப்பவரும் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவருமான ஏஞ்சலிஸ் எஸிபின்ஸோ தெரிவித்துள்ளார்.
வீடியோப் பதிவில் மிஷேல் ஒபாமாவின் உருவம் மங்கலாக்கப்பட்டது குறித்து அமெரிக்காவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தை தொடர்புக் கொண்டு அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் கோரினர்.
இது தொடர்பாக சவுதி அரேபிய தூதரக தகவல் தொடர்பு இயக்குனர் புதன்கிழமை ப்ளூம்பர்க் டிவிக்கு கூறும்போது, "அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷேல் ஆகியோர் சவுதிக்கு வந்தது முதல் அவர்கள் மன்னர் சல்மானை சந்தித்தது வரை அனைத்தையும் சவுதி டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்தது. அதில், மிஷேல் உருவம் மங்கலாக்கப்படவில்லை. அவரை சல்மான் கைக்குலுக்கி வரவேற்றது முதல் எந்த ஒரு காட்சியும் மங்கலாக்கப்படவில்லை'' என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு, சவுதி அரேபிய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மிஷேலின் உருவம் மங்கலாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சென்ற மிஷேல் ஒபாமா, அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். இதை சவுதி அதிகாரிகள் அணுகிய விதம், மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது. | அதன் விவரம்>மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்திய சவுதி அதிகாரிகள் அணுகுமுறை