அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ளார். அவரது மகள் நூருல் இசா, லெம்பா பந்தா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
இவர் கடந்த வியாழக்கிழமை தனது தந்தை அன்வர் இப்ராஹிம் உரையை நாடாளுமன்றத்தில் வாசித்தார். அப்போது, தனது தந்தைக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை குறித்தும், நீதித்துறை செயல்பாடுகளையும் விமர்சித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு நூருல் இசா கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமுற்ற நூருல் இசாவின் ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோர் தடுப்புக்காவல் மையத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூருல் இசா கைது செய்யப் பட்டதற்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தது.
இதனிடையே, நூருல் இசா காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நூருல் இசா கூறும்போது, “திங்கள்கிழமை இரவு முழுக்க நான் தனியாக வைக்கப்பட்டிருந்தேன். செவ்வாய்க்கிழமை காலை, எனது நாடாளுமன்ற உரை தொடர்பாக என்னிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. அரசு நிந்தனை சட்டத்தின் கீழ் என்மீது வழக்கு பதியப்படும் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.