உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் வெற்றி

பிடிஐ

சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் வெற்றி பெற்றுள்ளார். தான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்னும் 6 மாதங்களில் அரசில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

பிரதமராக டோனி அபோட் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்துள்ளன. அதனையொட்டி, அவரது தலைமை குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 61 ஆதரவு வாக்குகளும், 39 எதிர்ப்பு வாக்குகளும் பெற்று டோனி அபோட் வெற்றி பெற்றார்.

தன்னுடைய இந்த வெற்றியை, 'மரணத்துக்கு ஒப்பான அனுபவம்' என்று கூறியுள்ள அபோட், இன்னும் 6 மாதத்தில் தனது ஆட்சியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "எங்களைத் தேர்வு செய்த மக்களுக்காக உழைக்கவே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு (மக்கள்) சிறந்த ஆட்சியை வழங்குவது எங்கள் பொறுப்பு" என்றார்.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 24 சதவீத மக்கள் மட்டுமே பிரதமர் டோனி அபோட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். மீதமுள்ள 76 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT