இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய ஐ.நா. விசாரணை அறிக்கை தாமதப்படுத்தப்படுவதற்கு இலங்கையின் பிரதான தமிழர் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலவரங்கள் பற்றிய ஐ.நா. அறிக்கை 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது குறித்து தமிழ் தேசிய கூட்டணி கூறும்போது, “தள்ளிவைக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதியே” என்று கூறியுள்ளது.
இது குறித்து இலங்கை வடக்கு மாகாண கவுன்சிலர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஸீத் ராத் அல் ஹுசைனிக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில், ஐ.நா. அமைப்பு தமிழர்களுக்கான நீதியைத் தாமதப்படுத்தவோ, மறுக்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை மீதான மனித உரிமை மீறல் விசாரணையை நீங்கள் தள்ளிவைத்து பிப்.16ஆம் தேதி எடுத்த முடிவு குறித்து தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அந்த அறிக்கை வெளிவர வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மிகுந்த கவலையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கின்றனர். ஆனால், எதிர்பாராத இந்த தள்ளிவைப்பு முடிவினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது.
அறிக்கை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதன் மூலம் விசாரணை விவரங்கள் இன்னமும் வலுவாக வேண்டுமே தவிர வலுவிழக்கக் கூடாது என்பதை நாங்கள் கவலையுடன் எதிர்நோக்குகிறோம். கடந்த 67 ஆண்டுகளாக இலங்கை அரசின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழர்களுக்கு இலங்கை அரசு நன்மை செய்யாது என்பதை நாங்கள் தீவிரமாக நம்புகிறோம்.
அறிக்கையை தாமதப்படுத்தினால், இலங்கை அரசு மீண்டும் சர்வதேச நாடுகளை தங்களுக்குச் சாதகமாக்கி தமிழ் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கான பொறுப்பு,மற்றும் நீதி குறித்த ஐ.நா. நடைமுறைகளை பின்னடையச் செய்யும் என்றே நாங்கள் கவலையடைந்துள்ளோம்.”
என்று தெரிவித்துள்ளார்.