உலகம்

இரட்டைக் கோபுரத் தாக்குதலில் சவுதி அரச குடும்பத்துக்குத் தொடர்பு: அல் காய்தா குற்றவாளி தகவல்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் அரச குடும்பத்துக் குத் தொடர்பு இருப்பதாக அந்தத் தாக்குதலில் தொடர்புடைய அல் காய்தா குற்றவாளி தகவல் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. அந்த‌ விமானங்கள் தலா ஒரு கோபுரத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தின. இதற்கு அல் காய்தா தீவிரவாத அமைப்பு காரணம் என்று கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலில் தொடர்பு டைய 20-வது அல் காய்தா குற்றவாளி சகாரியாஸ் மவ்சாய் ஆவார். இவர் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். இவர் சார்ந்த வழக்கு ஒன்று சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் முன் வந்தது.

அப்போது, இந்தத் தாக்குதலில் சவுதி அரேபிய அரச குடும்பத்துக்குத் தொடர்பு உள்ளது என்று மவ்சாய் கூறினார்.

மேலும் அவர், "அமெரிக்கா வுக்கான சவுதி அரேபிய முன்னாள் தூதர் இளவரசர் துருக்கி அல் பைசல் அல் சவுத் உட்பட சில பிரபல சவுதி அதிகாரிகள் 90-களின் பிற்பகுதியில் இருந்து அல் காய்தாவுக்கு நிதி உதவி அளித்து வந்தார்கள்" என்றும் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா மறுப்பு

ஆனால் வாஷிங்டன்னில் உள்ள சவுதி அரேபியத் தூதரகம் மவ்சாயின் இந்தக் கூற்றை மறுத்துள்ளது. மேலும், "தீவிரவாத குற்ற விசாரணை வரலாற்றில் மிகத் தீவிரமான, கூர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வழக்கு இரட்டை கோபுரத் தாக்குதல் வழக்கு ஆகும். அதை விசாரித்த அதிகாரிகளே, இதில் சவுதி அரேபிய அரசின் தலையீடு இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டனர்" என்று கூறியதுடன் மவ்சாயை ‘பைத்தியக்கார குற்றவாளி' என்றும் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் செனட்டர் பாப் கிரஹாம், ‘தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் சவுதி அரேபிய அரசுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை என்னால் யூகிக்க முடிகிறது' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT