உலகம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்திடுக: கிராமி விழாவில் ஒபாமா வலியுறுத்தல்

ராய்ட்டர்ஸ்

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பலாத்காரம் ஆகியவற்றுக்கு எதிராக திரைப் பிரபலங்களும் கலைஞர்களும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்று கிராமி இசை விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

57-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் ஸ்டேபிள் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திரைப் பிரபலங்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பாப் இசைப் பாடகிகள் கேட்டி பெர்ரி, ரிஹானா, மடோனா ஆகியோர் தங்களது இசைப் பாடல்களை பாடினர்.

பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமா, பாடகி கேட்டி பெர்ரி மற்றும் குடும்ப வன்முறையில் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து பெண்களுக்கு எதிரான வன்புணர்வுகளுக்கு போராடி வரும் ப்ரூக் அக்ஸ்டெல் ஆகிய மூவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை சமூக ஆர்வலர்களுக்கு நிகராக பிரபலங்களுக்கும் உள்ளதென்றும் அதற்காக போராடும்படியும் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சியில் வீடியோ பதிவு மூலமாக பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, "பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திடுமாறு கிராமி விழாவில் பங்குபெற்றிருக்கும் ஒவ்வொரு கலைஞரையும் நான் வலியுறுத்துகிறேன். அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்துக்கொண்டிருக்கும் பொது மக்களுக்கும் நான் அதே வேண்டுகோளை விடுக்கிறேன்.

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இது எப்போதுமே இருந்து வந்தது தான் என்றாலும், மாறி வரும் உலகில் மாறாமலும் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை வருத்தம் அளிப்பதாக உள்ளது. உலகில் நடக்கும் பலாத்கார சம்பவங்கள் ஒவ்வொன்றும் கலாச்சார சீரழிவு அபாயத்தை குறிப்பிடுகிறது. குடும்ப வன்முறைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

சமூக ஆர்வலர்களைத் தாண்டி கலைஞர்கள் அனைவருக்கும் இதனை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. நீங்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுப்பட்டால் இதனை தடுப்பது எளிமையான ஒன்றாக இருக்கும். இதனை தனி நபர் பிரச்சினையாக பார்க்காமல், பொதுப் பிரச்சினையாகவும் கலாச்சார பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும்.

பாடல்கள், திரைப்படங்கள் மூலம் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையை நீங்கள் வலியுறுத்தலாம். பொது மக்களின் மனதில் எளிதில் கொண்டு செல்லக்கூடிய வகையில் நீங்கள் இதனை செயல்படுத்த வேண்டும்" என்றார்.

இதனை அடுத்து ப்ரூக் அக்ஸ்டெல் தான் வல்லுறவுக்கு உள்ளானது குறித்து மேடையில் பேசினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 'By the Grace of God' என்ற தனது இசைப் பாடலை கேட்டி பெர்ரி பாடினார்.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT