அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கோயில், அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள மிகப் பெரிய கோயிலாகும்.
சீட்டல் மெட்ரோபாலிட்டன் பகுதியில் உள்ள அந்தக் கோயிலின் சுற்றுச் சுவரில் "கெட் அவுட்" ( வெளியேறுங்கள் ) என ஸ்ப்ரே பெயின்ட் மூலம் எழுதப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், கோயிலில் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வாஷிங்டன் மாகாணத்தின் இந்து கோயில் மற்றும் கலாச்சார மையத்தின் நிர்வாக இயக்குநர் நித்யா நிரஞ்சன் கூறும்போது, "அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. யாரை வெளியேறுமாறு நீங்கள் சொல்கிறார்கள்? இந்த தேசமே குடியேறியவர்களுக்கானது. கோயிலில் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது வேதனையளிக்கிறது. இதற்கு முன்னர் நடந்த சம்பவத்தில், கோயில் சுற்றுச்சுவரில் ஸ்ப்ரே பெயின்ட் பூசப்பட்டிருந்தது. ஆனால், அப்போது இதுபோன்ற மிரட்டல் வாசகம் ஏதும் எழுதப்படவில்லை என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இம்முறை அப்படி இருக்க முடியாது. இந்த காரியத்தை யார் செய்திருப்பார்கள் என்றே யூகிக்க முடியவில்லை" என்றார்.
இந்து அமெரிக்க பவுண்டேஷனும் இத்தாக்குதலை கண்டித்துள்ளது. மஹா சிவராத்திரி விழாவை ஒட்டி இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால் காவல் துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என இந்து அமெரிக்க பவுண்டேஷனின் தலைவர் கன்சாரா கூறியுள்ளார்.