உலகம்

பிரிட்டன் ராணுவத்தில் சீக்கிய படை பிரிவு அமைக்க பரிசீலனை

பிடிஐ

பிரிட்டன் ராணுவத்தில் மீண்டும் சீக்கிய படைப் பிரிவை ஏற்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

முன்பு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சீக்கிய படைப் பிரிவு இருந்தது. இரு உலகப் போர்களில் பிரிட்டனுக்காக இந்த படைப்பிரிவு வீரத்துடன் போரிட்டது. இந்நிலையில் பிரிட்டன் ராணுவத்தில் மீண்டும் சீக்கிய படைப் பிரிவை ஏற்படுத்த வேண்டுமென்று அந்நாட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சர் நிக்கோலஸ் சோமஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினர்.

இதையடுத்து இந்த கோரிக்கையை அரசும், ராணுவமும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. முன்னதாக 2007-ம் ஆண்டு இதேபோன்ற கோரிக்கை எழுந்தது. அப்போது ராணுவத்தில் இனவாத பிரச்சினை ஏற்பட்டு விடக் கூடாது என்று கூறி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இரு உலகப் போர்களில் மட்டும் பிரிட்டன் இந்திய ராணுவத்தில் இருந்த 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வீர மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2 சதவீதம்தான் உள்ளனர். ஆனால் இந்தியாவின் முப்படைகளிலும் சீக்கியர்கள் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். ராணுவத்தின் பல உயர் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT