உலகம்

தீவிரவாதத்தை எதிர்த்து எழுதிய அமெரிக்க எழுத்தாளர் வங்கதேசத்தில் படுகொலை

ஹரூன் ஹபீப்

தீவிரவாதத்துக்கு எதிராக வலைப்பூவில் கருத்துக்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் அவிஜித் ராய் சந்தேக இஸ்லாமிய தீவிரவாதிகளால் வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கவலைக்கிடமாக உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அவிஜித் ராய் பிரபல எழுத்தாளர் ஆவார். தீவிரவாதத்துக்கு எதிராக 'ஃப்ரீ மைண்ட்' என்ற தலைப்பில் வலைப்பூவில் எழுதி வந்த அவருக்கு இதற்கு முன்பாக பலமுறை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

இந்த நிலையில் வங்கதேசத் தலைநகர் தாக்காவில் நடந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்க வந்த அவரை மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) தாக்காவில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுவிட்டு தனது மனைவியுடன் விடுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவர்களை வழிமறித்து, அவ்ஜித் ராய் மற்றும் அவரது மனைவி ரஃபீதியாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவ்ஜித் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'வைரஸ் ஆப் ஃபெயித்' மற்றும் 'ஃப்ரம் வாக்யூம் டூ தி யூனிவெர்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களையும் இவர் எழுதி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனை வலைதளத்திலிருந்து இவரது புத்தகத்தை நீக்க வேண்டும் என்று அடிப்படைவாதியான ஷஃபியூர் ரகுமான் ஃபாராபியிடமிருந்து இவருக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் ராய்க்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக ஷஃபியூர் ரகுமான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT