உலகம்

தீவிரவாதி பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்தது: ஐ.எஸ்.ஐ. முன்னாள் உளவாளி பரபரப்பு தகவல்

செய்திப்பிரிவு

அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு அடைக்கலம் அளித்திருக்கக்கூடும் என்று அந்த நாட்டின் முன்னாள் உளவாளி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லே டனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு வீரர்கள் கடந்த 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் அரசு கூறியபோது, பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருந்தது தெரியாது என்று சாதித்தது. இதுவரை அந்த கூற்றையே பாகிஸ்தான் கூறிவருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பில் பணியாற்றிய லெப்டினென்ட் ஜெனரல் ஆசாத் துரானி, அல்-ஜெசீரா தொலைக் காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சில உண்மைகளை உளறிக் கொட்டியுள்ளார்.

அபோதாபாதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ரகசிய வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தாரா என்று ஆசாத் துரானியிடம் அல்-ஜெசீரா நிருபர் கேள்வி எழுப்பிய போது துரானி மழுப்பலாக பதிலளித்தார். ஆனால் அவரை அறியாமல் உண்மையை கூறி விட்டார். ‘பின்லேடனை பற்றி ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். வேறு யாரும் அவரை குறித்து அவ்வளவு எளிதாக தகவல்களை திரட்ட முடியாது.

இதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ. உதவியால்தான் ரம்ஸி யூசுப் உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் பிடிக்க முடிந்தது.

அதுபோல பின்லேடனின் இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு தகவல் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் தகவல் அளித்திருக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு. உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது’ என்று ஆசாத் துரானி தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டியை மேற்கோள் காட்டி பின்லேடனுக்கு அடைக் கலம் அளித்தது பாகிஸ் தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தான் என்று அல்-ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT