தீவிரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோனதாக கூறி எகிப்து அரசால் கைது செய்யப்பட்ட அல்ஜஸீரா பத்திரிகை நிருபர் பீட்டர் கிரெஸ்டீ ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான பீட்டர் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் மோர்ஸிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதற்காக, அல்ஜஸீரா பத்திரிகையின் நிருபர்கள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெளிநாட்டின் பிரபல ஊடகங்கள் தங்களது அரசுக்கு எதிராகவும், முன்னாள் அதிபர் முகம்மது மோர்ஸிக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிட்டதாக குற்றம்சாட்டிய எகிப்து அரசு, இதனை தீவிரவாத நடவடிக்கையாக அறிவித்து பிரபல அல்ஜஸீரா பத்திரிகை நிருபர்கள் மூன்று பேரை சிறையில் அடைத்தது.
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை எகிப்து வழங்கியதாக சர்வதேச அளவிலான பிரச்சாரங்கள் பீட்டர் கிரெஸ்டீக்கு ஆதரவாக நடத்தப்பட்டன.
கைது நடவடிக்கைகளால் எகிப்தில் சமீப காலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மோர்ஸி ஆட்சியில் முடிக்கப்பட்ட வழக்குகளை கடந்த மாதம் மறுவிசாரணை செய்த கெய்ரோ நீதிமன்றம், நிருபர் பீட்டர் கிரெஸ்டீயை விடுவிக்க டிசம்பர் மாதமே உத்தரவிட்டது. ஆனால் அவரை விடுவிக்கும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
கடந்த வியாழக்கிழமை சினாவில் நடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் 30-க்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் பலியாகினர். இந்த போராட்ட கலவரத்தை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபர் அப்தெல் ஃபெத்தா சிஸி அனைத்து பிரச்சினைகளுக்கு சுமூகமான முடிவு ஏற்பட தான் விரும்புவதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக பீட்டர் கிரெஸ்டீ விடுவிக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. எனினும் மற்ற இரு நிருபர்களான முகமது ஃபெமி மற்றும் பஹெர் முகமது ஆகியோர்கள் விடுவிக்கப்படவில்லை. விடுதலையான கிரெஸ்டீ தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டதாக எகிப்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.