உலகம்

162 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் விபத்து: கேப்டன் இருக்கையில் இல்லாதது காரணமா? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

செய்திப்பிரிவு

ஏர் ஏசியா விமானம் 162 பயணி களுடன் கடலில் மூழ்கி விபத்துக் குள்ளானபோது, அதன் கேப்டன் இருக்கையில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் ஏசியா ஜெட் விமானம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி இந்தோனே சியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஊழியர்கள் உட்பட 162 பயணிகள் பரிதாபமாக உயிரி ழந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், ‘விமானம் ஜாவா கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கேப்டன் இருக்கையில் இல்லை. அவருக்குப் பதில் துணை பைலட் விமானத்தை இயக்கி இருக்கிறார். அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கேப்டன் திரும்பி வந்தபோது அவரால் எதுவும் செய்ய முடியாமல் போயுள்ளது. இதனால் விமானம் கடலில் மூழ்கி உள்ளது என்று விசாரணை குழுவில் உள்ள 2 பேர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் விபத்து நடப்பதற்கு முன் நிமிடத்துக்கு நிமிடம் என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். விசாரணை முடிவதற்குள் விபத்துக் கான காரணத்தை முடிவு செய்ய முடியாது என்று இந்தோனேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், விமானத்தைக் கட்டுப் படுத்தும் முக்கிய கம்ப்யூட்டரில் ஒரு வாரமாக கோளாறு இருந்துள்ளது. அதை சரி செய்யாமலேயே விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் கூட அதே விமானத்தில் அதே கேப்டன் சென்றுள்ளார் என்று கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். ‘‘விமான விபத்து குறித்து இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தி வருவதால், எந்தக் கருத்தும் சொல்ல முடி யாது’’ என்று ஏர் ஏசியா விமான நிறுவனம் மறுத்துவிட்டது.

கம்ப்யூட்டரில் கோளாறு இருக்கும்போது, அதிகபட்ச உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தை இயக்குவதற்கு பிரான்சை சேர்ந்த துணை பைலட் ரெமி பிளசெல்லை, இந்தோனேசிய கேப்டன் இரியான்டோ அனுமதித்துள்ளார். அவரே கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, கைகளால் இயக்கும்படி கூறி யிருக்கிறார் என்று கூறுகின்றனர். எனினும், அடுத்தடுத்த தவறு களால்தான் விமானம் விபத்துக்கு உள்ளாகும்.

எனவே, விபத்துக்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல கூடாது என்று பாதுகாப்பு பிரிவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT